என் உண்மையான பிள்ளையாகிய தீமோத்தேயுவுக்கு
சபையை ஒழுங்குபடுத்துவது பற்றியும், ஆரோக்கியமான உபதேசத்தைக் காத்துக்கொள்வது பற்றியும் இளம் தீமோத்தேயுவுக்குப் பவுல் அளிக்கும் மேய்ப்பு ஆலோசனை.
1 1எங்கள் பிதாவும் நம்முடைய இரட்சகருமானவரின் கட்டளையினாலும், நம்முடைய நம்பிக்கையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டளையினாலும் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், 2விசுவாசத்தில் என் உண்மையான பிள்ளையாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: எங்கள் பிதாவினாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் உனக்குக் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
பிதாவின் வீட்டைக் காத்துக்கொள்
3நான் மக்கெதோனியாவுக்குப் புறப்படுகையில் உன்னைக் கேட்டுக்கொண்டபடியே, சிலர் வேறு உபதேசங்களை போதிக்காதபடிக்கும், 4விசுவாசத்தினாலே உண்டாகிற எங்கள் பிதாவின் நிர்வாகத்திற்குப் பதிலாக வீண் தர்க்கங்களை உண்டாக்குகிற கட்டுக்கதைகளிலும் முடிவில்லாத வம்சவரலாறுகளிலும் மனதைச் செலுத்தாதபடிக்கும் அவர்களுக்குக் கட்டளையிடும்படி எபேசுவிலே தங்கியிரு. 5இந்தக் கட்டளையின் நோக்கமோ, சுத்தமான இருதயத்திலிருந்தும் நல்மனச்சாட்சியிலிருந்தும் மாயமற்ற விசுவாசத்திலிருந்தும் உண்டாகிற அன்பே. 6சிலர் இவைகளைவிட்டு விலகி, வீணான வார்த்தைகளுக்குத் திரும்பி, 7தாங்கள் சொல்லுகிறதையாவது, உறுதியாய் வலியுறுத்திப் பேசுகிறதையாவது அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகர்களாயிருக்க விரும்புகிறார்கள்.
8நியாயப்பிரமாணத்தை ஒருவன் நியாயப்படி பயன்படுத்தினால் அது நல்லதென்று அறிந்திருக்கிறோம். 9நியாயப்பிரமாணம் நீதிமானுக்காக ஏற்படுத்தப்படவில்லை, ஆனால் அக்கிரமக்காரருக்கும் கீழ்ப்படியாதவர்களுக்கும், துன்மார்க்கருக்கும் பாவிகளுக்கும், அசுத்தருக்கும் பரிசுத்தமில்லாதவர்களுக்கும், தகப்பன்மார்களையும் தாய்மார்களையும் அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும், 10வேசித்தனம் செய்கிறவர்களுக்கும், ஆண்களோடே ஆண்கள் உறவுகொள்ளுகிறவர்களுக்கும், அடிமை வியாபாரிகளுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணையிடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு விரோதமான வேறு எதற்கும் ஏற்படுத்தப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 11இது, என்னிடம் ஒப்புவிக்கப்பட்ட, ஸ்தோத்திரிக்கப்பட்ட எங்கள் பிதாவினுடைய மகிமையான சுவிசேஷத்திற்கு ஏற்றபடியேயாயிருக்கிறது.
மிகக் கொடியவனுக்கும் பிதாவின் இரக்கம் வந்தது
12என்னைப் பலப்படுத்தின நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை நான் ஸ்தோத்திரிக்கிறேன்; ஏனெனில் அவர் என்னை உண்மையுள்ளவனாக எண்ணி, தமது ஊழியத்திற்கு நியமித்தார். 13முன்னே நான் தேவனை நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன்; ஆனாலும், நான் அறியாமல் விசுவாசமில்லாமல் அதைச் செய்தபடியால் இரக்கம்பெற்றேன். 14நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் என்னில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. 15பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகாரத்திற்கும் பாத்திரமுமாயிருக்கிறது; அவர்களில் நான் மிகக் கொடியவன். 16ஆனாலும், நித்தியஜீவனுக்காக இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசிக்கப்போகிறவர்களுக்கு நான் மாதிரியாயிருக்கும்படிக்கு, பாவிகளில் மிகக் கொடியவனாகிய என்னிடத்தில் கிறிஸ்து இயேசு தமது எல்லா நீடிய சாந்தத்தையும் காண்பிக்கும்படிக்கே நான் இரக்கம்பெற்றேன். 17நித்திய காலங்களின் ராஜாவும், அழிவில்லாதவரும், கண்ணுக்குத் தோன்றாதவரும், ஒரே தேவனுமானவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
நல்ல போராட்டத்தைப் போராடு
18என் பிள்ளையாகிய தீமோத்தேயுவே, முன்னே உன்னைக்குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்றபடி, நீ அவைகளினாலே நல்ல போராட்டத்தைப் போராடும்படிக்கு, இந்தக் கட்டளையை உன்னிடத்தில் ஒப்புவிக்கிறேன். 19விசுவாசத்தையும் நல்மனச்சாட்சியையும் பற்றிக்கொள்; இவைகளைத் தள்ளிவிட்டதினாலே சிலர் விசுவாசத்தைக்குறித்துக் கப்பற்சேதமடைந்தார்கள். 20இமெனேயு, அலெக்சந்தர் என்பவர்களும் அப்படிப்பட்டவர்களே; தேவனை நிந்திக்கக்கூடாதென்று அவர்கள் கற்றுக்கொள்ளும்படி, அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.