பிதாவானவர் தமது சத்தத்தை அனுப்புகிறார்
யோவான் வனாந்தரத்தில் பிரசங்கிக்கிறான்; ஜனங்கள் உண்மையில் என்ன செய்யவேண்டும் என்று அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்: அங்கியைப் பகிர்ந்துகொடுங்கள், அதிகமாக வசூலிக்காதீர்கள், பலவந்தம் பண்ணாதீர்கள். ஏரோதின் பாவத்தை அவன் வெளிப்படையாகச் சொல்கிறான், அதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். இயேசு மற்ற எல்லாரோடும் ஞானஸ்நானம் பெறுகிறார், அவருடைய பிதா அவரை நேசகுமாரன் என்று அழைக்கிறார்.
3 1திபேரியு காயிசர் அரசாண்ட பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியு பிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது கலிலேயாவுக்குக் காற்பங்கு அதிபதியாயும், அவனுடைய சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா திராகோனீத்து நாட்டுக்குக் காற்பங்கு அதிபதியாயும், லிசானியா அபிலேனேக்குக் காற்பங்கு அதிபதியாயும் இருந்தபோது, 2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாயிருந்த காலத்தில், வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு எங்கள் பிதாவின் வார்த்தை உண்டாயிற்று. 3அப்பொழுது அவன் யோர்தான் நதிக்கு அடுத்த நாடெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தான். 4தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் வசனங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே: “வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாவது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள். 5பள்ளத்தாக்குகளெல்லாம் நிரப்பப்படும், மலைகளும் குன்றுகளுமெல்லாம் தாழ்த்தப்படும். கோணலானவைகள் செவ்வையாகும், கரடுமுரடானவைகள் சமமான வழிகளாகும், 6மாம்சமான யாவரும் எங்கள் பிதாவின் இரட்சிப்பைக் காண்பார்கள்.”
7அப்பொழுது அவனிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வந்த திரளான ஜனங்களை நோக்கி அவன்: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகிற கோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு எச்சரிப்பு அளித்தவன் யார்? 8ஆகையால் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளத் தொடங்காதேயுங்கள். எங்கள் பிதா இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழும்பப்பண்ண வல்லவராயிருக்கிறாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேரிலே வைக்கப்பட்டிருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.”
10அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி, “அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
11அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரமுடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என்றான்.
12ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறுவதற்காக வந்து, அவனை நோக்கி, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
13அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைவிட அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள்” என்றான்.
14போர்ச்சேவகரும் அவனை நோக்கி, “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் பலவந்தமாயாவது பொய்யாய்க் குற்றஞ்சாட்டியாவது ஒருவரிடத்திலும் பறித்துக்கொள்ளாமல், உங்கள் சம்பளமே போதுமென்றிருங்கள்” என்றான்.
15ஜனங்கள் காத்திருந்து, யோவானே கிறிஸ்துவாயிருப்பானோ என்று எல்லாரும் தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 16யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். 17தூற்றுமுறம் அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
18வேறே அநேக புத்திமதிகளையும் சொல்லி, யோவான் ஜனங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். 19காற்பங்கு அதிபதியாகிய ஏரோதுவோ, தன் சகோதரனுடைய மனைவியாகிய ஏரோதியாள் நிமித்தமாகவும், தான் செய்த மற்றெல்லாத் தீமைகள் நிமித்தமாகவும், யோவானால் கடிந்துகொள்ளப்பட்டபோது, 20மற்றெல்லாவற்றோடும் இதையும் கூட்டி, யோவானைக் காவல்கூடத்தில் அடைத்துவைத்தான்.
பிதாவானவர் தமது குமாரனை நேசகுமாரன் என்று அழைக்கிறார்
21ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போலச் சரீரரூபமாய் அவர்மேல் இறங்கினார். அன்றியும், “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
23இயேசு தமது ஊழியத்தைத் தொடங்கினபோது ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராயிருந்தார்; அவர் ஜனங்களால் நினைக்கப்பட்டபடி யோசேப்பின் குமாரன்; யோசேப்பு ஏலியின் குமாரன், 24ஏலி மாத்தாத்தின் குமாரன், மாத்தாத் லேவியின் குமாரன், லேவி மெல்கியின் குமாரன், மெல்கி யன்னாவின் குமாரன், யன்னா யோசேப்பின் குமாரன், 25யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன், மத்தத்தியா ஆமோசின் குமாரன், ஆமோஸ் நாகூமின் குமாரன், நாகூம் எஸ்லியின் குமாரன், எஸ்லி நங்காயின் குமாரன், 26நங்காயி மகாத்தின் குமாரன், மகாத் மத்தத்தியாவின் குமாரன், மத்தத்தியா சேமேயின் குமாரன், சேமேயி யோசேக்கின் குமாரன், யோசேக் யோதாவின் குமாரன், 27யோதா யோவனானின் குமாரன், யோவனான் ரேசாவின் குமாரன், ரேசா செருபாபேலின் குமாரன், செருபாபேல் சலாத்தியேலின் குமாரன், சலாத்தியேல் நேரியின் குமாரன், 28நேரி மெல்கியின் குமாரன், மெல்கி அத்தியின் குமாரன், அத்தி கோசாமின் குமாரன், கோசாம் எல்மோதாமின் குமாரன், எல்மோதாம் ஏரின் குமாரன், 29ஏர் யோசுவாவின் குமாரன், யோசுவா எலியேசரின் குமாரன், எலியேசர் யோரீமின் குமாரன், யோரீம் மாத்தாத்தின் குமாரன், மாத்தாத் லேவியின் குமாரன், 30லேவி சிமியோனின் குமாரன், சிமியோன் யூதாவின் குமாரன், யூதா யோசேப்பின் குமாரன், யோசேப்பு யோனானின் குமாரன், யோனான் எலியாக்கீமின் குமாரன், 31எலியாக்கீம் மெலெயாவின் குமாரன், மெலெயா மென்னாவின் குமாரன், மென்னா மத்தாத்தாவின் குமாரன், மத்தாத்தா நாத்தானின் குமாரன், நாத்தான் தாவீதின் குமாரன், 32தாவீது ஈசாயின் குமாரன், ஈசாய் ஓபேதின் குமாரன், ஓபேத் போவாசின் குமாரன், போவாஸ் சல்மோனின் குமாரன், சல்மோன் நகசோனின் குமாரன், 33நகசோன் அம்மினதாபின் குமாரன், அம்மினதாப் அத்மினின் குமாரன், அத்மின் அர்னியின் குமாரன், அர்னி எஸ்ரோனின் குமாரன், எஸ்ரோன் பாரேசின் குமாரன், பாரேஸ் யூதாவின் குமாரன், 34யூதா யாக்கோபின் குமாரன், யாக்கோபு ஈசாக்கின் குமாரன், ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன், ஆபிரகாம் தேராகின் குமாரன், தேராகு நாகோரின் குமாரன், 35நாகோர் செரூக்கின் குமாரன், செரூக் ரெகூவின் குமாரன், ரெகூ பேலேக்கின் குமாரன், பேலேக் ஏபேரின் குமாரன், ஏபேர் சாலாவின் குமாரன், 36சாலா காயினானின் குமாரன், காயினான் அர்பகசாத்தின் குமாரன், அர்பகசாத் சேமின் குமாரன், சேம் நோவாவின் குமாரன், நோவா லாமேக்கின் குமாரன், 37லாமேக் மெத்தூசலாவின் குமாரன், மெத்தூசலா ஏனோக்கின் குமாரன், ஏனோக்கு யாரேதின் குமாரன், யாரேத் மகலலெயேலின் குமாரன், மகலலெயேல் காயினானின் குமாரன், 38காயினான் ஏனோசின் குமாரன், ஏனோஸ் சேத்தின் குமாரன், சேத் ஆதாமின் குமாரன், ஆதாம் எங்கள் பிதாவின் குமாரன்.