என் பாவத்தின் பாரம்
தாவீதின் சங்கீதம்; ஞாபகப்படுத்துதலுக்கானது.
வியாதிப்பட்டு, காயங்கள் அழுகி, சத்துருக்கள் சதி செய்யும்போது நண்பர்களால் கைவிடப்பட்டு, தாவீது தன் நிலைமைக்குத் தன் சொந்தப் பாவமே காரணம் என்று காண்கிறான்; தன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களுக்கு எதிர்த்துப் பேசமாட்டான். செவிடனைப்போல் மௌனமாயிருந்து, பதில் கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கும் ஒரே ஒருவராகிய தன் பிதாவுக்குக் காத்திருக்கிறான்.
38 1என் பிதாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். 2ஏனெனில் உம்முடைய அம்புகள் என்னில் ஆழமாய் உருவியிருக்கின்றன, உம்முடைய கை என்மேல் கடினமாய் இறங்கியிருக்கிறது. 3உம்முடைய கோபத்தினால் என் சரீரத்தில் ஆரோக்கியம் இல்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் உறுதி இல்லை.
4ஏனெனில் என் பாவங்கள் என் தலைக்கு மேலாய் எழும்பியிருக்கின்றன; பாரமான சுமையைப்போல் அவை என்னால் தாங்கமுடியாத பாரமாயிருக்கின்றன. 5என் மதிகேட்டினால் என் காயங்கள் நாற்றமெடுத்து அழுகிப்போயின. 6நான் கூனிக் குனிந்து மிகவும் தாழ்ந்திருக்கிறேன்; நாள்முழுவதும் துக்கத்தோடே திரிகிறேன். 7ஏனெனில் என் விலாக்கள் எரிபந்தமாய் இருக்கின்றன, என் மாம்சத்தில் உறுதி இல்லை.
8நான் உணர்வற்று முற்றிலும் நொறுங்குண்டேன்; என் இருதயத்தின் வேதனையினால் கதறுகிறேன். 9என் ஆண்டவராகிய பிதாவே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது, என் பெருமூச்சு உமக்கு மறைவாயில்லை. 10என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் என்னைவிட்டு நீங்குகிறது; என் கண்களின் ஒளியும் என்னைவிட்டுப் போய்விட்டது. 11என் நண்பரும் தோழரும் என் வேதனையைக் கண்டு விலகி நிற்கிறார்கள், என் நெருங்கிய இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
12என் உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கு தேடுகிறவர்கள் கேட்டைப்பற்றிப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனையைச் சூழ்ச்சிசெய்கிறார்கள். 13ஆனாலும் நான் கேளாத செவிடனைப்போலவும், தன் வாயைத் திறவாத, பேசமாட்டாத ஒருவனைப்போலவும் இருக்கிறேன். 14நான் கேளாத மனிதனைப்போலவும், தன் வாயில் மறுஉத்தரவு இல்லாதவனைப்போலவும் ஆனேன். 15ஆனாலும் என் பிதாவே, உமக்காகவே நான் காத்திருக்கிறேன்; என் ஆண்டவராகிய பிதாவே, நீரே பதிலளிப்பீர்.
16ஏனெனில் நான், “என் கால் தள்ளாடும்போது என்மேல் பெருமைபாராட்டுகிறவர்கள், என்னைக்குறித்து ஒருபோதும் மகிழ்ந்துகொள்ளாதிருக்கட்டும்” என்று சொன்னேன். 17ஏனெனில் நான் விழுந்துவிடத்தக்கவனாய் இருக்கிறேன், என் வேதனை எப்போதும் என் முன்பாக இருக்கிறது. 18நான் என் அக்கிரமத்தை அறிக்கையிடுகிறேன்; என் பாவத்தைக்குறித்து விசனப்படுகிறேன். 19என் சத்துருக்களோ வலிமையும் பலமும் உள்ளவர்கள், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
20நன்மைக்குப் பதிலாகத் தீமையைச் சரிக்கட்டுகிறவர்கள், நான் நன்மையைப் பின்பற்றுவதால் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். 21என் பிதாவே, என்னைக் கைவிடாதேயும்; என் பிதாவே, என்னைவிட்டுத் தூரமாய் நிற்காதேயும். 22என் இரட்சிப்பாகிய, ஆண்டவராகிய பிதாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.