எங்கள் பிதா நல்லவர்
ஆசாபின் சங்கீதம்.
ஆரோக்கியமும் அகந்தையுமுள்ள ஐசுவரியவான்கள்மேல் பொறாமைகொண்டு ஆசாப் ஏறக்குறைய கால் இடறினான். அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் போய் அவர்கள் முடிவு எங்கே என்று காணும்வரை ஒன்றும் தீரவில்லை. தான் மிருகத்தனமாய் இருந்ததை ஒப்புக்கொள்கிறான்; தான் விரும்பியதை ஏற்கனவே பெற்றிருந்ததைக் கண்டடைகிறான்: தன் கையைப் பற்றிப்பிடித்திருக்கும் தன் பிதாவின் கரம்.
73 1மெய்யாகவே இஸ்ரவேலுக்கும், சுத்த இருதயமுள்ளவர்களுக்கும் எங்கள் பிதா நல்லவர்.
2நானோ, என் கால்கள் இடறிவிடும் தருவாயில் இருந்தன; என் அடிகள் சறுக்கிவிடும் நிலையில் இருந்தன. 3ஏனெனில், துன்மார்க்கருடைய செழிப்பைக் கண்டபோது, அகந்தையுள்ளவர்கள்மேல் நான் பொறாமைகொண்டேன். 4அவர்கள் மரணத்தில் வேதனை உணர்வதில்லை; அவர்களுடைய சரீரம் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கிறது. 5மற்றவர்களைப்போல அவர்கள் இக்கட்டில் இல்லை; மற்ற மனிதரைப்போல அவர்கள் வாதிக்கப்படுவதில்லை. 6ஆகையால் அகந்தை அவர்களுக்கு மாலையாயிருக்கிறது; கொடுமை அவர்களை வஸ்திரமாய் மூடுகிறது. 7கொழுப்பினால் அவர்களுடைய கண்கள் எடுப்பாய் நிற்கின்றன; அவர்களுடைய இருதயத்தின் கற்பனைகள் அளவற்றுப் பெருகுகின்றன. 8அவர்கள் பரியாசம்பண்ணி, தீங்குடன் பேசுகிறார்கள்; உயரத்திலிருந்து ஒடுக்குதலை மிரட்டுகிறார்கள். 9அவர்கள் தங்கள் வாயை வானத்துக்கு விரோதமாய் வைக்கிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் ஆணவமாய்த் திரிகிறது. 10ஆகையால் அவருடைய ஜனங்கள் அவர்களிடமாய்த் திரும்பி, மிகுதியான தண்ணீரைக் குடிக்கிறார்கள். 11அவர்கள்: “தேவன் எப்படி அறிவார்? உன்னதமானவரிடத்தில் அறிவு உண்டோ?” என்கிறார்கள். 12இதோ, இவர்களே துன்மார்க்கர்; எப்போதும் சுகமாய் இருந்து, செல்வத்தில் பெருகுகிறார்கள்.
13மெய்யாகவே நான் என் இருதயத்தை வீணாய்ச் சுத்தமாய்க் காத்து, குற்றமின்மையில் என் கைகளைக் கழுவினேன். 14ஏனெனில் நாள்முழுவதும் நான் வாதிக்கப்பட்டேன், காலைதோறும் கடிந்துகொள்ளப்பட்டேன்.
15“நான் இப்படிப் பேசுவேன்” என்று சொல்லியிருந்தால், உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்கு நான் துரோகம்பண்ணியிருப்பேன். 16இவைகளையெல்லாம் அறிந்துகொள்ள முயன்றபோது, அது என் பார்வையில் வருத்தமான காரியமாயிருந்தது, 17எங்கள் பிதாவின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நான் பிரவேசிக்கும்வரையில் அப்படியே இருந்தது; அப்பொழுது அவர்களுடைய முடிவை உணர்ந்துகொண்டேன். 18மெய்யாகவே நீர் அவர்களை சறுக்கலான இடங்களில் நிறுத்துகிறீர்; அவர்களை அழிவில் விழப்பண்ணுகிறீர். 19அவர்கள் ஒரு நிமிடத்தில் எப்படி அழிக்கப்படுகிறார்கள்! பயங்கரங்களால் முற்றிலும் வாரிக்கொள்ளப்படுகிறார்கள்! 20ஒரு கனவைப்போல, ஒருவன் நித்திரை தெளிந்து விழிக்கும்போது அது மறைவதுபோல், ஆண்டவராகிய பிதாவே, நீர் எழும்பும்போது, அவர்களை வீண் நிழல்களாய் அசட்டைபண்ணுவீர்.
21என் இருதயம் கசந்துபோய், என் உள்ளத்தில் நான் குத்தப்பட்டபோது, 22நான் அறிவற்றவனும் மூடனுமாய் இருந்தேன்; உமக்கு முன்பாக ஒரு மிருகத்தைப்போல் இருந்தேன். 23ஆயினும் நான் எப்போதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையைப் பிடித்திருக்கிறீர். 24உம்முடைய ஆலோசனையால் நீர் என்னை நடத்துகிறீர், பின்பு மகிமையில் என்னை ஏற்றுக்கொள்வீர். 25பரலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு யார் உண்டு? பூமியிலும் உம்மைத்தவிர நான் விரும்புவது ஒன்றுமில்லை. 26என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோனாலும், எங்கள் பிதா என் இருதயத்தின் பெலனும், என்றென்றைக்கும் என் பங்குமாய் இருக்கிறார்.
27உம்மைவிட்டுத் தூரமாய்ப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள்; உமக்கு உண்மையற்றவர்கள் யாவரையும் நீர் அழித்துப்போடுகிறீர். 28எனக்கோ, எங்கள் பிதாவை அண்டியிருப்பது நல்லது; ஆண்டவராகிய பிதாவை நான் என் அடைக்கலமாக்கிக்கொண்டேன், அப்படியே உம்முடைய எல்லாக் கிரியைகளையும் நான் விவரிப்பேன்.