ஆட்டுக்குட்டியானவரும் 1,44,000 பேரும்
ஆட்டுக்குட்டியானவர் சீயோனின்மேல் நிற்கிறார்; அவருடைய பிதாவின் நாமம் எழுதப்பட்ட 1,44,000 பேர் அவரோடிருக்கிறார்கள்; வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாத ஒரு பாட்டை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மூன்று தூதர்கள் மேலே பறக்கிறார்கள்: சகல ஜாதிகளுக்கும் நற்செய்தி, பாபிலோனின் விழுகை, மிருகத்தை வணங்குகிறவர்களுக்கு எச்சரிப்பு. பின்பு பூமி அறுவடைசெய்யப்படுகிறது, திராட்சப்பழங்கள் மிதிக்கப்படுகின்றன.
14 1ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு சீயோன் மலையின்மேல் நிற்பதை நான் கண்டேன்; அவருடைய நாமமும் அவருடைய பிதாவின் நாமமும் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர் அவரோடிருந்தார்கள். 2பெருவெள்ளங்கள் இரைகிற இரைச்சலைப்போலவும் பலத்த இடிமுழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட அந்தச் சத்தம் சுரமண்டலம் வாசிக்கிறவர்கள் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிறது போலிருந்தது. 3அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகவும் ஒரு புதுப் பாட்டைப் பாடினார்கள்; பூமியிலிருந்து மீட்கப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர வேறொருவரும் அந்தப் பாட்டைக் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. 4இவர்கள் ஸ்திரீகளால் தீட்டுப்படாதவர்கள்; ஏனெனில் இவர்கள் கன்னிகளாயிருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; மனுஷரிலிருந்து மீட்கப்பட்டு, எங்கள் பிதாவுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக இவர்கள் ஆனார்கள்; 5இவர்களுடைய வாயில் ஒரு பொய்யும் காணப்படவில்லை; இவர்கள் குற்றமற்றவர்கள்.
நித்திய சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது
6பின்பு, வேறொரு தூதன் வானத்தின் நடுவில் பறப்பதைக் கண்டேன்; பூமியில் குடியிருக்கிறவர்களுக்கும், சகல ஜாதிகளுக்கும், கோத்திரங்களுக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் அறிவிக்கும்படி நித்திய சுவிசேஷம் அவனிடத்தில் இருந்தது. 7அவன் மகா சத்தமிட்டு: “எங்கள் பிதாவுக்குப் பயந்து, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள்; ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்பின் வேளை வந்திருக்கிறது. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுக்களையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள்” என்றான்.
8இரண்டாம் தூதன் பின்சென்று: “மகா நகரமாகிய பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அது தன் வேசித்தனமாகிய பாலியல் பாவத்தின் ஆவேசமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்ததே” என்றான்.
9மூன்றாம் தூதன் அவர்களைப் பின்சென்று, மகா சத்தமிட்டு: “எவனாகிலும் மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கி, தன் நெற்றியிலாவது கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொண்டால், 10அவனும் எங்கள் பிதாவின் கோபத்தின் மதுவைக் குடிப்பான்; அது அவருடைய கோபத்தின் பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்டிருக்கிறது; அன்றியும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அவன் வேதனைப்படுவான். 11அவர்களுடைய வேதனையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதின் நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது” என்றான்.
12பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்குகிறது; எங்கள் பிதாவின் கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்கள் இவர்களே.
13அப்பொழுது, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்: “இதுமுதல் கர்த்தருக்குள் மரிக்கிற மரித்தோர் பாக்கியவான்கள் என்று எழுது.” “ஆம், அவர்கள் தங்கள் பிரயாசங்களைவிட்டு இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களைப் பின்தொடருகிறது” என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்.
மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர்
14பின்பு நான் பார்த்தேன்; இதோ, ஒரு வெண்மேகம், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கு ஒப்பானவராகிய இயேசு உட்கார்ந்திருந்தார்; அவருடைய சிரசின்மேல் பொன்முடியும், அவருடைய கையில் கூர்மையான அரிவாளும் இருந்தன. 15வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரை நோக்கி மகா சத்தமிட்டு: “உம்முடைய அரிவாளை நீட்டி அறுப்பறும்; அறுப்பறுக்கிற வேளை வந்திருக்கிறது, பூமியின் விளைச்சல் நன்றாய்ப் பழுத்திருக்கிறது” என்றான். 16அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமி அறுக்கப்பட்டது.
17பின்பு வேறொரு தூதன் பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டான்; அவனிடத்திலும் கூர்மையான அரிவாள் இருந்தது. 18அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு, கூர்மையான அரிவாளைப் பிடித்திருந்தவனை நோக்கி மகா சத்தமிட்டு: “உன் கூர்மையான அரிவாளை நீட்டி, பூமியின் திராட்சச்செடியின் குலைகளை அறுத்துச் சேர்; அதின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறதே” என்றான். 19அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேல் நீட்டி, பூமியின் திராட்சச்செடியை அறுத்து, எங்கள் பிதாவின் கோபத்தின் பெரிய ஆலையிலே போட்டான். 20அந்த ஆலை நகரத்துக்கு வெளியே மிதிக்கப்பட்டது; ஆலையிலிருந்து இரத்தம் புறப்பட்டு, குதிரையின் கடிவாளங்களுக்கு எட்டும் உயரமாய், ஏறக்குறைய 300 கிலோமீட்டர் தூரம்வரைக்கும் ஓடிற்று.