அவருடைய ஆசை என்மேல் இருக்கிறது
அந்த மனிதன் பாதரட்சை அணிந்த அவளுடைய பாதங்கள் முதல் கூந்தல் வரை புகழ்ந்து, வெளிப்படையாக அவளில் மகிழ்கிறான். அவள் அதைத் தட்டிக்கழிக்கவில்லை. அந்த வாஞ்சை இருவருக்கும் உரியது, தனக்கும் உரியது என்று உரிமையோடு சொல்லி, அவனுக்காகக் கனிகளைச் சேர்த்து வைத்திருக்கும் திராட்சத்தோட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் அவனை அழைத்துச் செல்கிறாள்.
7 1பிரபுவின் மகளே, பாதரட்சைகளில் உன் பாதங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! உன் தொடைகளின் வளைவுகள் தேர்ந்த சிற்பியின் கைவேலையாகிய இரத்தினங்களைப்போல் இருக்கின்றன. 2உன் தொப்புள் கலந்த திராட்சரசம் குறையாத வட்டமான கிண்ணம். உன் வயிறு லீலிபுஷ்பங்களால் சூழப்பட்ட கோதுமைக் குவியல். 3உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளாகிய இரண்டு மறியைப்போல் இருக்கின்றன. 4உன் கழுத்து தந்தத்தினால் செய்யப்பட்ட கோபுரம்போல் இருக்கிறது. உன் கண்கள் பாத்ரபீமின் வாசலண்டையிலிருக்கிற எஸ்போனின் குளங்கள். உன் மூக்கு தமஸ்குவை நோக்கிப்பார்க்கிற லீபனோனின் கோபுரம்போல் இருக்கிறது. 5கர்மேல் மலையைப்போல் உன் தலை உன்னைச் சூடுகிறது; உன் விரிந்த கூந்தல் இரத்தாம்பரம்போல் இருக்கிறது; அதின் சுருள்களில் ஒரு ராஜா சிறைப்பட்டிருக்கிறான். 6என் அன்பே, உன் எல்லா இன்பங்களோடும் நீ எவ்வளவு அழகாயும் எவ்வளவு இனிமையாயும் இருக்கிறாய்! 7உன் நிலை பேரீச்சமரத்தைப்போலவும், உன் ஸ்தனங்கள் அதின் குலைகளைப்போலவும் இருக்கின்றன. 8“நான் பேரீச்சமரத்தில் ஏறி, அதின் கனிகளைப் பிடிப்பேன்” என்றேன். உன் ஸ்தனங்கள் திராட்சச்செடியின் குலைகளைப்போலவும், உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்களைப்போலவும், 9உன் வாய் உத்தம திராட்சரசத்தைப்போலவும் இருக்கின்றன. அது என் நேசருக்காக இதமாய்ப் பாய்ந்து, உதடுகளின்மேலும் பற்களின்மேலும் மெதுவாய்ச் சறுக்கிச் செல்கிறது.
10நான் என் நேசருடையவள், அவருடைய ஆசை என்மேல் இருக்கிறது. 11வாரும், என் நேசரே, வயல்வெளிகளுக்குப் புறப்பட்டுப்போய், கிராமங்களில் இராத்தங்குவோம். 12அதிகாலையில் திராட்சத்தோட்டங்களுக்குப் போய், திராட்சச்செடிகள் துளிர்விட்டதோ, பூக்கள் மலர்ந்ததோ, மாதுளைகள் பூத்ததோ என்று பார்ப்போம். அங்கே நான் என் அன்பை உமக்குத் தருவேன். 13தூதாயீம் கனிகள் தங்கள் வாசனையை வீசுகின்றன; நம்முடைய வாசல்களுக்குமேல் புதியதும் பழையதுமான உத்தமமான கனிகளெல்லாம் இருக்கின்றன; என் நேசரே, அவைகளை உமக்காக நான் சேர்த்துவைத்திருக்கிறேன். a a v13 தூதாயீம் என்பன வாசனையுள்ள செடிகள்; பூர்வகாலத்தில் இவை காதல் ஆசையைத் தூண்டி, கருவளத்தை அதிகரிக்கும் என்று பரவலாக நம்பப்பட்டன.