ராஜாவின் திருமண நாள்
அந்தப் பெண் தான் நேசிக்கிறவரை இருண்ட நகரத்தில் தேடுகிறாள், காவலாளரிடம் விசாரிக்கிறாள், பின்பு அவரைக் கண்டடைந்து, தன் தாயின் வீட்டுக்கு அழைத்துவரும் வரை அவரை விடமாட்டாள். பின்பு வேறு குரல்கள் சாலொமோனின் காவலுள்ள பல்லக்கு நெருங்கி வருவதைப் பார்க்கின்றன; ராஜா தம் திருமண நாளில் முடிசூட்டப்பட்டிருக்கிறார்.
3 1இரவு முழுவதும் என் படுக்கையில் என் ஆத்துமா நேசிக்கிறவரைத் தேடினேன்; அவரைத் தேடினேன், ஆனால் அவரைக் காணவில்லை. 2இப்போது நான் எழுந்து நகரத்தில் திரிவேன், தெருக்களிலும் சதுக்கங்களிலும் சுற்றித் திரிவேன்; என் ஆத்துமா நேசிக்கிறவரைத் தேடுவேன். நான் அவரைத் தேடினேன், ஆனால் அவரைக் காணவில்லை. 3நகரத்தைச் சுற்றிக் காவல் காத்த காவலாளர்கள் என்னைக் கண்டார்கள். “என் ஆத்துமா நேசிக்கிறவரை நீங்கள் கண்டீர்களா?” 4அவர்களைக் கடந்து சற்றுத் தூரம் செல்வதற்குள்ளாகவே என் ஆத்துமா நேசிக்கிறவரைக் கண்டேன். நான் அவரைப் பிடித்துக்கொண்டேன், என் தாயின் வீட்டிற்கு, என்னைக் கருத்தரித்தவளின் அறைக்கு அவரை அழைத்து வரும்வரை அவரைப் போகவிடவில்லை. 5எருசலேமின் குமாரத்திகளே, வெளியின் வெளிமான்கள்மேலும் பெண்மான்கள்மேலும் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்: அன்பு தானாக விரும்பும்வரை அதைத் தூண்டவும் வேண்டாம், எழுப்பவும் வேண்டாம்.
6வணிகனுடைய எல்லா நறுமணப் பொடிகளாலும், வெள்ளைப்போளத்தாலும் தூபவர்க்கத்தாலும் நறுமணமூட்டப்பட்டு, புகைத் தூண்கள்போல வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்? 7இதோ—இது சாலொமோனுடைய சொந்தச் சிவிகை, அதைச் சுற்றிலும் அறுபது பராக்கிரமசாலிகள், இஸ்ரவேலின் பராக்கிரமசாலிகளில் உள்ளவர்கள், 8அவர்கள் அனைவரும் பட்டயம் பிடித்தவர்கள், போருக்குப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்; இராக்காலத்தின் பயங்கரத்திற்கு எதிராக ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் இடுப்பில் கட்டியிருக்கிறான். 9சாலொமோன் ராஜா லீபனோனின் மரத்தால் தனக்கு ஒரு சிவிகையைச் செய்துகொண்டான். 10அதின் தூண்களை வெள்ளியாலும், அதின் முதுகுப் பகுதியைப் பொன்னாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தாலும் செய்தான்; அதின் உட்புறம் எருசலேமின் குமாரத்திகளால் அன்புடன் அலங்கரிக்கப்பட்டது. 11சீயோனின் குமாரத்திகளே, வெளியே வந்து, சாலொமோன் ராஜாவைப் பாருங்கள்; அவனுடைய திருமண நாளிலே, அவனுடைய இருதயம் மகிழ்ந்த நாளிலே, அவனுடைய தாய் அவனுக்குச் சூட்டிய கிரீடத்தை அணிந்திருக்கிறான்.